கர்நாடகாவில் 224 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவைக்கு மே 10, 2023 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மும்முனை போட்டியில் உள்ள நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
மாலை 5 மணி நிலவரப்படி காங்கிரஸ் 136 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக 121 இடங்களிலும், பாஜக 56 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 121 இடங்களை பெற்றுள்ள காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்கள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் கர்நாடகா பாஜகவினருக்கும், மக்களுக்கும், “கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக காரிய கர்த்தாக்களின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.