
தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களின் துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு இன்றும், நாளையும் (ஏப்ரல் 25 மற்றும் ஏப்ரல் 26ஆம் தேதி) என இரு நாட்கள் நடைபெற்று வருகிறது. உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தொடர்ந்து 4வது ஆண்டாக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மாநாட்டுக்குத் தலைமையேற்றுள்ளார்.
அதே சமயம் ஆளுநர் ஆர்.என். ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டில் அரசு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணைவேந்தர்கள் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளனர். இந்நிலையில் இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைவாக உள்ளதாக ஏ.எஸ்.இ.ஆர். அறிக்கை கூறுகிறது. இதற்கு முன் இல்லாத அளவிற்கு இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என அரசு சார்பில் மிரட்டியதாகச் சிலர் எனக்கு எழுத்துப்பூர்வமாகக் கடிதம் அளித்துள்ளனர்.
மாநாட்டில் பங்கேற்கக் கூடாது எனத் துணைவேந்தர்களை அரசு மிரட்டியுள்ளது. மாநாட்டில் பங்கேற்றால் வீடு திரும்பமுடியாது என வீடு தேடிச் சென்று காவல்துறையினர் மிரட்டல் விடுத்துள்ளனர். சில துணை வேந்தர்கள் உதகைக்கு வந்தும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இது போன்ற ஒரு அசாதாரண சூழல் முன்னெப்போதும் ஏற்பட்டது இல்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு இந்த மாநாட்டை நடத்துவது பிடிக்கவில்லை நேரில் நிறையப் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த பிறகே இந்த கூட்டத்தை நடத்துகிறேன். கல்வியின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் மாநில அரசின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்கவில்லை” எனப் பேசினார்.