Published on 28/05/2019 | Edited on 28/05/2019
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக கூட்டணி 353 இடங்களை பிடித்து தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.மாநிலத்தில் திமுக 38 இடங்களை கைப்பற்றியது.அதோடு தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியது.இதனால் அதிமுக கட்சி ஆட்சி அமைக்க போதுமான 122 எம்.எல்.ஏக்கள் உள்ளதால் ஆட்சிக்கு தற்போது எந்த வித பிரச்னையும் இல்லை என்று சொல்லப்படுகிறது. தேர்தலின் போது ஒரு சில அமைச்சர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.ஆனால் தேர்தலில் தினகரன் கட்சியால் அதிமுகவுக்கு எதிர்பார்க்கப்பட்ட அளவு பின்னடைவு ஏற்பட வில்லை என்பதால் தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வர திட்டமில்லை என்று அதிமுக வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஒரு சில அமைச்சர்கள் தேர்தலில் தினகரனின் அமமுக மிக குறைந்த வாக்குகளை மட்டும் பெற்றதால் அவர்களும் எடப்பாடி பக்கம் சென்று விடலாம் என்று இருக்கிறார்களாம்.இன்னும் சில முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தினகரனிடம் இருந்து பிரிந்து மீண்டும் அதிமுக போக உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.இதனால் இந்த நேரத்தில் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வந்தால் அதிமுகவில் மீண்டும் ஒரு உட்கட்சி பூசலுக்கு வழிவகுக்கும் என்பதால் அதே அமைச்சரவை தொடரும் என்று கூறப்படுகிறது.