Skip to main content

விருப்ப மனு; நேர்காணல் தேதியை அறிவித்த தி.மு.க.

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
Petition of Will DMK has announced the interview date

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தது. அதன்படி தி.மு.க. சார்பில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை உருவாக்கவும், தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவும் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த குழுக்களில் தி.மு.க. மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றிருந்தனர். இந்த குழுவினர் தங்களது பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி (19-2-2024) முதல் அண்ணா அறிவாலயத்தில் விநியோகிக்கப்பட்டது. வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் ரூ. 50 ஆயிரம். விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ. 2 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற தி.மு.க.வினர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கடந்த 1 ஆம் தேதி முதல் திமுக தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பித்து வந்தனர்.

இதனையடுத்து மக்களவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனுத்தாக்கல் இன்று (07.03.2024) மாலை 6 மணிக்கு முடிவடைந்துள்ளது. இதில் தற்போதைய தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர். பாலு , கனிமொழி, ஆ. ராசா, தயாநிதி மாறன்,  தமிழச்சி தங்கப்பாண்டியன், கதிர் ஆனந்த் ஆகியோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் 2 ஆயிரத்து 984 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் வரும் 10 ஆம் தேதி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் நடத்த உள்ளார். இது குறித்து அமைச்சரும், தி.மு.க. பொதுச் செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், வருகிற 10-3-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாகச் சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.

இந்நேர்காணலின் போது அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். வேட்பு மனு அளித்தவர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ, பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்