ஜார்க்கண்ட் மாநிலத்தில், நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. அதே போல், பா.ஜ.க, ஏ.ஜே.எஸ்.யூ, ஐக்கிய ஜனதா தளம், எல்.ஜே.பி. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளன.
இத்தகைய நிலையில் மொத்தம் 81 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில், கடந்த 13ஆம் தேதி (13.11.2024) முதற்கட்டமாக 43 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து ஜார்க்கண்டில் 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (15.11.2024) பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி ஜார்க்கண்டில் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்ப இருந்தார். அதாவது ஜார்கண்ட் மாநிலம் தியோகரில் இருந்து டெல்லிக்கு அவர் செல்ல விருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனைக் கண்டறிந்த அதிகாரிகள் விமான பயணத்தை ரத்து செய்தனர். மேலும் பழுதை சிக்கி விமானத்தை இயக்குவதற்கான பணிகளில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பிரதமர் மோடி டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோட்டா பகுதியில், தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்ள இருந்தார். அப்போது வானில் ஹெலிகாப்டர் பறப்பதற்கான அனுமதி கோரப்பட்டது. இருப்பினும் ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள இருந்த ஹெலிகாப்டரை இயக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்ப்பட்டது . இதனையடுத்து சுமார் 75 நிமிடங்கள் பின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.