வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை கோரி வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்தனர். மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை அவசர வழக்காக நாளை விசாரிக்க உள்ளது.