கோவையில் சில நாட்களுக்கு முன்பு இந்து மத அமைப்பை சேர்ந்த ஒரு நபர் பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றி அவமரியாதை செய்தார். அச்சம்பவத்திற்கு பிறகு ஈரோட்டில் பெரியார் சிலை, பெரியார், அண்ணா நினைவு இல்லம் போன்ற இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இன்று மதியம் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை அருகே ஈரோடு நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரகாஷ் என்பவர் கையில் காவி துண்டோடு வந்தார். பிறகு அவர் பெரியார் சிலைக்கு காவி துண்டினை போற்றுவதற்காக வேகமாக ஓடி வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த நபரை தடுத்து நிறுத்தி குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.
அந்த நபர் "வெற்றி வேல், வீர வேல், பழனி முருகனுக்கு அரகோரா" என கோஷமிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் பெரும் பரபரப்பாக இருந்தது. "ஏய்யா திட்டமிட்டே கலவரத்தை ஏற்படுத்துறே இதுல உனக்கு என்ன லாபம்?" என போலீசார் அந்த நபரிடம் கேட்க, "எல்லாம் ஒரு விளம்பரம் தான் சார், இதுதான் அரசியல்" என பதில் கூறியிருக்கிறார். பிரகாஷ் மீது நகர போலீசார் மத கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.