தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொட்ங்கியுள்ள நிலையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என யாரையும் விட்டுவைக்கவில்லை.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. கோவிந்தராசு, சில நாட்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது நண்பர் முத்துராமலிங்கத்தை பார்க்கச் சென்றுள்ளார். அன்றிலிருந்து எம்.எல்.ஏ. மற்றும் அவரது உதவியாளர் கணேசன் ஆகியோருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கபசுரக்குடிநீர் குடித்த பிறகு காய்ச்சல் குணமடைந்துள்ளது. ஆனாலும் உடனடியாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பு பேராவூரணி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டு ஆய்வு செய்த எம்.எல்.ஏ. மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார். அதன் பிறகு அவர் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். ஆனால் உதவியாளர் கணேசன் பல்வேறு நலத்திட்ட விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு பரிசோதனை முடிவுகள் வெளியானபோது எம்.எல்.ஏ. கோவிந்தராசு மற்றும் அவரது உதவியாளர் கணேசன் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து இருவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு சில நாட்களாக காய்ச்சல் இருப்பதால் அவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ஃபோனில் நலம் விசாரித்து சிறப்பு சிகிச்சைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. வின் உதவியாளர் நேற்று வரை பங்கேற்ற விழாக்களில் கலந்துகொண்டவர்கள் கலக்கத்துடன் உள்ளனர். அதனால் பலருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.