ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரசின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைக் களமிறக்கத் தீவிரம் காட்டி வருகிறது. அதிமுகவின் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இருவரும் மாறி மாறி ஆதரவாளர்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தனியரசு, ''எடப்பாடி பழனிசாமியின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த தேர்தலின் மூலமாக கட்டாயம் பதில் தருவார்கள். அவர் திருந்துவதற்காக மக்களும் எடப்பாடி பழனிசாமியை நிராகரிப்பார்கள்.
அதிமுக ஒன்றுபட்டு களத்துக்கு வரவில்லை என்றால், ஓபிஎஸ்-ஐ; சசிகலாவை; டி.டி.வி.தினகரனை நிராகரித்துவிட்டு களத்திற்கு போனால் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் எடப்பாடி அணிக்கு கிடைக்காது என்பதை அவர் உணர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன். இன்றைக்கும் அதைப் பற்றி பேசி உள்ளேன். எடப்பாடி திருந்தாமல் தனியாக வேட்பாளரை நிறுத்துவேன் என்று சொல்வதால் பெரிய பின்னடைவை சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை ஓபிஎஸ்-ஐ வலிமையாக தலைமை ஏற்று ஒழுங்குபடுத்தி களத்தை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்'' என்றார்.