சிவகாசியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கிவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்றைக்கு உலக நாடுகள் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் விளையாட்டுக்குத்தான் தனி மரியாதை. தமிழக அரசும் இந்திய அரசும் இதற்கு முன் இருந்த அரசுகளும், எந்த அரசாக இருந்தாலும் விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக நிதிகளை ஒதுக்கி விளையாட்டுத்துறையை ஊக்கப்படுத்தி வருகின்றன. அதனாலேயே நமது நாடு முன்னணி நாடாக விளங்குகிறது.
நம்முடைய கிராமப் பகுதிகளில் இன்னும் நமது பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விளையாட்டுகள் மூலமாக இளைஞர்களுக்குள் ஒற்றுமையும் சமுதாயப் புரட்சியும் ஏற்படுகின்றன. விளையாட்டு மூலம் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். அப்படிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளை ஊக்கப்படுத்துவதுதான் அனைவரது நோக்கமாக இருக்கிறது.
எம்ஜிஆர் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார். ஜெயலலிதாவும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தினார். விளையாட்டு வீரர்களுக்கு நிதி உதவி செய்து உலக நாடுகள் மத்தியில் தமிழக வீரர்களைக் கொண்டு சேர்த்து சிறப்புறச் செய்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். இப்படி விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி விளையக்கூடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இங்கு வந்து விளையாடிய அத்தனை விளையாட்டு வீரர்களுக்கும் விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் அடுத்த முறை வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” எனப் பேசினார்.
இந்தக் கபாடி போட்டியில் விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 100 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப் போட்டியில் தமிழ்பாடி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முதல் பரிசாக 12 அடி கோப்பையும் 15,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 10 அடி கோப்பையும் 12,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 8 அடி கோப்பையும் 10,000 ரூபாயும், நான்காம் பரிசாக 6 அடி கோப்பையும் 8000 ரூபாயும், 5ஆம் பரிசு முதல் 8ஆம் பரிசு வரை 4 அடி கோப்பையும் 4000 ரூபாயும், 9ஆம் பரிசு முதல் 12ஆம் பரிசு வரை 2 அடி கோப்பையும் 2000 ரூபாயும் பரிசுகளாக வழங்கப்பட்டன.