நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஏ.பாப்தே, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

திமுக கொறடா சக்கரபாணி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசியலமைப்பு 226 பிரிவின் கீழ் 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். மேலும், ஏற்கனவே இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. மேலும் இரண்டரை ஆண்டுகள் இவ்வாறே கடந்துவிடுமா என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தனர். கபில் சிபல் வாதம் திமுகவுக்கு சாதகமாக இருப்பதால், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு டென்ஷனாக இருப்பதாக கூறப்படுகிறது.