Skip to main content

“திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள்” - இ.பி.எஸ்.!

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
People will never forgive or forget the DMK govt EPS

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்டபங்கள் , முகாம்களாக மாற்றப்பட்டு, வீடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகூர்த்தம் போன்ற பல்வேறு காரணங்களைக் கூறி மக்களை வலுக்கட்டாயமாக திமுக அரசு முகாமிலிருந்து வெளியேற்றி வருவதாகச் செய்திகள் வருகின்றது. ஏற்கனவே புயலின் தாக்கத்தால் மனதைப் பிழியும் சொல்லொண்ணா துயரில் உள்ள மக்களை, உணவு, குடிநீர் ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நடுரோட்டில் இறங்கி போராடும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது இந்த திமுக அரசு.

வயிற்றுப்பசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ மாட்டார்கள். பேரிடர் காலங்களில் மக்களுக்கான உரிய குடிநீர், உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். இயல்புநிலை திரும்பும் வரை மக்களுக்கான அனைத்து தேவைகளையும் தடையின்றி கிடைத்திட உறுதி செய்யுமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்