
மதுரையில் அதிமுகவின் மாபெரும் எழுச்சி மாநாடு கடந்த மாதம் 20 ஆம் தேதி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டிற்காக மாவட்டம் தோறும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு மாவட்டங்களில் இருந்து மாபெரும் கூட்டத்தை திரட்டி வருவதற்கு கோடிக்கணக்கான ரூபாயை வாரி இரைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், துறையூர் புறநகர் பகுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முன்னாள் அமைச்சர் தங்கமணி வந்துள்ளார். அவரை வரவேற்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் பரஞ்சோதி, சிவபதி மற்றும் முன்னாள் எம்.பி. ரத்தினவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.
அப்போது துறையூர் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் முன்னாள் அமைச்சர் சிவபதி, பரஞ்சோதியை பார்த்து அதிமுக மாநாட்டிற்காக கொடுத்த பணத்தை அபகரித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக முன்னாள் அமைச்சர்களான சிவபதி மற்றும் பரஞ்சோதி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிக் கைகலப்பு வரை சென்றுள்ளது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தின் போது, ‘நான் பணத்தை எடுத்துச் சென்றதாக யார் கூறியது’ என்று பரஞ்சோதி கேட்க, ‘மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் கூறிய தகவல்’ என சிவபதி கூறியிருக்கிறார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை பார்த்த முன்னாள் எம்.பி. ரத்தினவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் தங்கவேல் ஆகிய இருவரும் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமி நியமிக்க உள்ளார். வருகின்ற 10ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு, 20 ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் பரஞ்ஜோதி வசம் உள்ள துறையூர் மற்றும் முசிறி ஆகிய இரண்டு தொகுதிகளையும் சிவபதியிடம் எடப்பாடி பழனிசாமி கொடுக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அதன் காரணமாகத் தான் முன்னாள் அமைச்சர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட ஆரம்பித்துள்ளது என்றும் சொல்கிறார்கள் அதிமுகவினர்.