தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அந்த வகையில், திருச்சியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் சுஜாதாவை ஆதரித்து, திருச்சியில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது; “நாடு இப்போது அபாயகரமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக, கர்நாடகா ஷிமோகாவில் ஹிஜாப் அணிந்த பெண்கள் கல்லூரிக்கு செல்ல கூடாது என தடை செய்கின்றனர்.
மத்தியில் ஆட்சி செய்யும் அரசு மதவாத அரசாக உள்ளது. இந்தியையும் இந்துத்துவா கொள்கையையும் வைத்து செயல்படும் அரசாக உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை, இந்தி பேசாத அனைவரும் இரண்டாம் கட்ட மனிதர்கள். காலங்காலமாக ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த பெண்களை, இன்று தடுத்து நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் கல்லூரிக்கு வரக்கூடாது என்றும், அவர்களை விரட்டி அடிப்பதற்காகவும் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் என்றுமே மதசார்பற்ற கொள்கையில் இருந்து மாறுபடாது. இந்தக் கட்சிகள் இரண்டுமே சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாகவே உள்ளன. அவர்கள் பின்பற்றும் இந்துத்துவாவுக்கும் சாதாரண நம்மைப்போன்ற இந்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவர்கள் மேல் மட்ட சனாதன இந்துத்துவாத்தை பின்பற்றுகின்றனர். இஸ்லாமியர்களை கிறிஸ்தவர்களை மட்டுமின்றி நம்மைப் போன்ற சாதாரண இந்துக்களையும் அவர்கள் வஞ்சிக்கின்றனர். அத்தகைய கட்சிகள் நகர்மன்றத்திற்குள் வரக்கூடாது என்பதில், மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். அந்தக் கட்சிகள் சார்பில் போட்டியிடுபவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டுமின்றி அனைத்து காலகட்டத்திலும், காங்கிரஸ் கட்சி சிறுபான்மை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.