Published on 09/08/2019 | Edited on 09/08/2019
முன்னாள் முதல்வர் கலைஞர் மறைந்து ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, அவர் மறைந்த நாளான இன்று சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞர் அமர்ந்து எழுத்தோவியம் தீட்டுவது போன்று 6.2 அடி அகலம், 6.5 அடி உயரத்தில், 30 டன் எடையில் நிறுவப்பட்ட வெண்கல சிலையை மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். இந்த சிலைதிறப்பு நிகழ்வை அடுத்து சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நாராயணசாமி ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
அதனையடுத்து ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, புதுவை முதல்வர் நாராயணசாமி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் மட்டுமே பேச வாய்ப்பளிக்கப்பட்டனர். மம்தா பானர்ஜி உதயநிதி பெயருக்கு பெங்காலி மொழியில் பொருள் கூறியது அனைத்து திமுக தரப்பினரையும் கவர்ந்தது. இதனையடுத்து மதிமுக பொது செயலாளர் வைகோ விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கலைஞர் சிலை திறப்பு விழாவில் அவர் பேசவில்லை. இதனால் அவரது பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் சற்று ஏமாற்றம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கும், வைகோவிற்கும் இடையேயான வார்த்தை போர் கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.