2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பேரவை துவங்கி நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய உடனே, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டது, எஸ்.பி வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். கூச்சல் காரணமாக அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் அறிவுறுத்தியபோதிலும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன் பேச வாய்ப்பளிக்காததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். ''மிகவும் நியாயமான முறையில் ஜனநாயக பாதையில், இன்னும் சொல்லப்போனால் சட்ட ஒழுங்கிற்குச் சிறு குறையோ பங்கமோ ஏற்பட்டுவிடாத முறையில் உள்ளாட்சித் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது. ஆனால் குண்டர்கள், ரவுடிகள் இறக்கப்பட்டு கள்ள ஒட்டு போடப்பட்டு வெற்றி பெற்றதாக எடப்பாடி சொல்கிறார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். அவர்களது கட்சியிலிருந்து தேர்தல் வேலைகளை பார்த்தவர்களைத்தான் அப்படிச் சொல்கிறார்களா. அவர் கட்சியைச் சேர்ந்த ஒருவர், சட்டப்பேரவை தலைவராக இருந்த ஒருவர், முன்னாள் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்த ஜெயக்குமார் தேர்தல் காலத்தில் எந்த வகையில் நடந்து கொண்டார். ஒரு நபரின் சட்டையைக் கழற்றி பின்னே கையை கட்டி தரதரவென இழுத்து வந்தார். எடப்பாடி பழனிசாமி ரவுடிகள், குண்டர்கள் என அவரது கட்சியினரையும், அந்த மூத்த அமைச்சரையும்தான் குறிப்பிடுகிறாரோ என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. இந்த அரசு எல்லோர் மீதும் பொய்வழக்கு போடுகிறது என்று சொல்லியிருக்கிறார். இந்த அரசு யார் மீதும் பொய் வழக்கு போடவில்லை. உப்பைத் தின்றவர் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும் என்ற விதி இருக்கிறது. இன்றைக்கு க்ரிப்டோ கரன்சி என்று ஒன்று இருக்கிறது என சாதாரண மக்களே தெரிந்துகொண்டுள்ளார்கள் என்று சொன்னால் அது வேலுமணியின் வீட்டில் நடந்த ரெய்டு மூலமாகத்தான் தெரியவந்துள்ளது என்பதை அவர்கள் உணர வேண்டும்'' என்றார்.