திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக சி.பி.எம்.கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், மாநில துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட நந்தவனப்பட்டி, என்.எஸ்.நகர், செல்லமந்தாடி, சாலையூர், கொத்தம்பட்டி, சீலப்பாடி, முள்ளிப்பாடி, அணைப்பட்டி, புளியமரத்துபட்டி, பாறையூர், தாமரைப்பாடி விளக்கு, உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சி.பி.எம்.கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு பிரச்சாரம் செய்து வாக்குகள் சேகரித்தார்.
இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால் உள்பட கட்சி பொறுப்பாளர்களும் கூட்டணி கட்சியினரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து சீலப்பாடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் ஐ,பெரியசாமி பேசுகையில் “கிராமங்களில் வறுமையை ஒழித்த 100 நாள் வேலை திட்டத்தை மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஒழித்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள் மட்டுமின்றி தென்மாநிலங்களிலும் பாதிக்கும் நிலைமை உருவாகி உள்ளது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது 100 நாள் வேலை திட்டத்தை எப்படி பாதுகாத்து கிராமப்புற ஏழை மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து காப்பாற்றினாரோ அவர் வழியில் வந்த திராவிட மாடல் ஆட்சி நாயகன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் 100 நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்து வருகிறார். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலை திட்டமே இருக்காது. அனைத்து கிராம மக்களும் பாதிக்கப்படுவார்கள். இதனைக் கருத்தில் கொண்டு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் மத்தியில் ஆளும் பாஜக அரசை விரட்டும்.
வங்கிகளில் பணப் பரிமாற்றம் செய்தால் அதற்கு கமிஷன், அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களுக்கு கூட அதிக வரி, உள்ளிட்ட பல காரணங்களால் மோடி தலைமையிலான பா.ஜ.க. கட்சியை விரட்ட தயாராகி விட்டார்கள். இங்கு போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சச்சிதானந்தம் எளிய விவசாய குடும்பத்தைச் சார்ந்தவர். எந்த நேரமும் அவரை நீங்கள் சந்திக்கலாம். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து உதவி செய்யக் கூடிய பண்பாளர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சந்தித்து உங்களுக்கு தேவைப்படும் நலத்திட்ட உதவிகளை பெறலாம் என்றதோடு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் 100 நாள் வேலைத்திட்டத்தை காப்பாற்றுவதோடு மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை விரட்டும்” என்று கூறினார்.