18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 7 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 232 இடங்களிலும், மற்றவை 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், “இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மட்டுமல்ல, நாட்டின் நிர்வாக அமைப்பு, உளவுத்துறை அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கு எதிராக நாங்கள் போராடினோம். ஏனெனில் இந்த நிறுவனங்கள் அனைத்தையும் அமித்ஷா மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் கைப்பற்றி இருந்தனர். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளேன். வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தொகுதியைத் தக்கவைப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். நான் இன்னும் அதைப்பற்றி முடிவு செய்யவில்லை.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை மக்கள் புறக்கணித்துவிட்டனர். விவசாயிகள், ஏழைகள் மற்றும் பட்டியலின மக்கள்தான் அரசியல் சாசனத்தை காப்பாற்றியுள்ளனர். உத்தரப்பிரதேச மக்கள் நாட்டின் அரசியலையும், அரசியல் சாசனத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் புரிந்து கொண்டு, அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாத்துள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கும் இந்தியா கூட்டணிக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்கையில், “நாங்கள் நாளை இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் ஒரு சந்திப்பு நடத்தப் போகிறோம். நாங்கள் எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர்களை மதிக்கிறோம். எனவே அவர்களைக் கேட்காமல் பத்திரிகைகளுக்கு எந்த அறிக்கையையும் விட மாட்டோம்” எனத் தெரிவித்தார்.