ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கி விட்டது.
ஈரோடு மாவட்ட திமுக சார்பில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் பணியைத் தொடங்கிய ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சு.முத்துசாமி இரண்டாவது நாளான இன்று தை அமாவாசை தினம் என்பதால் வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் பணியையும் தொடங்கிவிட்டார். அமைச்சர் முத்துசாமியுடன் அமைச்சர் கே.என்.நேருவும் இணைந்து ஈரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டார்கள்.
பரபரப்பான இடைத்தேர்தல் களத்தில் திமுகவின் முன்னணி தலைவர்கள் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டதால், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.