சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய சட்டப் பேரவையில் கேள்வி பதில் நேரம் துவங்கியது. கேள்வி பதில் நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேச முற்பட்டார்.
எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் நாளை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தற்போது அரசினர் தீர்மானம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். தொடர்ந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இதனிடையே, ஆளுநர் தொடர்பாக சட்டப் பேரவையில் விவாதிக்கக் கூடாது என்ற விதிகளை தளர்த்துவதற்கான தீர்மானம் கொண்டு வர அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில், நான்கில் 3 பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இத்தீர்மானத்தை அவை முன்னவரும் அமைச்சருமான துரைமுருகன் கொண்டு வந்தார்.
தீர்மானத்தை நிறைவேற்ற எண்ணி கணிக்கும் முறையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவையில் இருந்த 146 உறுப்பினர்களில் 144 பேர் ஆதரவாகவும், 2 பேர் (பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்) எதிராகவும் வாக்களித்துள்ளனர்; தீர்மானத்தை ஆதரிப்போர் எண்ணிக்கை நான்கில் 3 பங்கிற்கும் அதிகமாக இருப்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.