தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும்தான். அதனால், இவர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர், அவரை டெல்லியில் பேசுமாறு தொடர்ந்து வலியுறுத்தினர். ஓ.பன்னீர்செல்வமும் அதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனாலும், அமைச்சரவையில் ரவிந்திரநாத்துக்கு இடம் கிடைக்கவில்லை.

29ஆம் தேதி இரவு வரை பாஜக மேலிடத்தில் இருந்து அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு என்று எந்த உறுதிமொழியும் வழங்கப்படவில்லை. தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைத்திலிங்கம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம் பேசியுள்ளார்.
அப்போது எனக்கு எப்படியும் அமைச்சரவையில் இடம் வாங்கித் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த தடவை வாய்ப்பை தவற விட்டுவிட்டோமெனில், அதன் பிறகு அமைச்சரவையில் நுழைய முடியாது. இன்னொரு விசயம் நாம் கேபினெட்டில் இருந்தால்தான் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் இருக்கும். எந்தவித நெருக்கடியும் தரமாட்டார்கள். சில விசயங்களில் துணிச்சலாக முடிவு எடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதற்கு ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இருவரும், எங்களுக்கும் கேபினெட்டில் சேர வேண்டும் என ஆசைதான். ஒரு கேபினெட் மந்திரியும், இரண்டு இணை மந்திரியும் கேட்டுள்ளோம். அதில் உங்கள் பெயரும் உள்ளது. ஆனால் இப்போது வரைக்கும் டெல்லியில் இருந்து எந்தவிதமான கிரீன் சிக்னலும் கிடைக்கவில்லை. டெல்லியில் இருந்து எந்த தகவலும் வராமல் உங்களுக்கு என்ன உத்தரவாதம் தரமுடியும் என்று வைத்திலிங்கத்திடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் 30ஆம் தேதி பதவியேற்பு விழாவில் தமிழகத்தில் யாருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இருந்தாலும், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும், " அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இடம் கிடைக்கும் " என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.