கன்னத்தில் முத்தமிட்டு.. தாடையை பிடித்து செல்லம் கொஞ்சி.. பாலை ஊற்றி.. இப்படி பல விதத்தில் எடப்பாடி பழனிசாமியின் வெற்றியை அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என வழங்கியுள்ள தீர்ப்பு எடப்பாடி ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி, அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது, ஓபிஎஸ் பொருளாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இலவச இணைப்பாக ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள் பலரும் நீக்கப்பட்டனர். உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கிய நிலையில், இதை எதிர்த்து ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர் வைரமுத்து என்பவரும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. அதன்படி, நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் ஆகியோர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார்கள். கடந்த ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என அறிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இதன்மூலம் ஓபிஎஸ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்றும் தெரியவந்துள்ளது. இதன்மூலம், அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதாதான் என்ற விதியை நீக்கியதும் செல்லும் எனக் கூறப்படுகிறது. இந்த அதிரடி தீர்ப்பால் அதிமுக முழுமையாக எடப்பாடியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இந்த தீர்ப்பையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘அண்ணன் எடப்பாடியார் வாழ்க.. நிரந்தரப் பொதுச்செயலாளர் எடப்பாடி வாழ்க..’ எனும் கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. இனிப்பு, பட்டாசுடன் எடப்பாடி கட்டவுட் ஒன்றுக்கு பால் ஊற்றி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, எம்ஜிஆர் சிலையின் கன்னத்தில் முத்தமிட்ட அதிமுகவினர், ஜெயலலிதா சிலையின் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.