நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இத்தகைய சூழலில் மக்களவைத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கி இருந்தது. இதனால் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்பித் சிங் அரோரா அமர்வில் இன்று (01.03.2024) விசாரணைக்கு வந்தது.
அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 6.7 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. எனவே இந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அணுகினோம். ஆனால் இதுவரை தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கவில்லை. மேலும் கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ரத்து செய்து கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “கரும்பு விவசாயி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு லக்கி இல்லை போல. எனவே வேறு சின்னத்திற்கு மாறிவிட வேண்டியது தானே” எனக் கூறினர். மேலும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதிடுகையில், “முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கர்நாடகாவில் உள்ள பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கட்சி கடந்த டிசம்பர் மாதமே கரும்பு விவசாயி சின்னம் வேண்டும் என கோரிக்கை வைத்தது. அந்த அடிப்படையில் தான் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது” என வாதிடப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “தேர்தல் சின்னங்களை முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும். இதுதான் நடைமுறை. இதை எப்படி மாற்ற முடியும். ஒரு குறிப்பிட்ட கட்சிக்காக நடைமுறையை மாற்ற முடியுமா” என கேள்வி எழுப்பினர். மேலும் வழக்கு விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.