அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதங்கள் எழுந்து தற்போது ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி எனப் பிரிந்து செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓபிஎஸ். தொடர்ந்து ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களையும் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று கோவை செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வத்தினை சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு கட்சி நிர்வாகிகளுடன் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக சட்ட விதிகளைச் சுயநலத்திற்காக அவர்கள் திருத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது. இன்று நாம் எம்ஜிஆர் வகுத்துக்கொடுத்த சட்டவிதிகளின் படி கழகம் நடைபெற வேண்டும் என்று தர்மயுத்தத்தைத் துவங்கியுள்ளோம். புதிதாக சில விதிகளை அங்கு உள்ளே புகுத்தி இருக்கிறார்கள்.
எம்ஜிஆர் வகுத்த விதியில் சாதாரணத் தொண்டன் கூட கழகத்தின் உச்சத்திற்கு வரலாம் என்ற விதி இருக்கிறது. அதனால் தான் ஓபிஎஸ், ஈபிஎஸ் முதலமைச்சராக வர முடிந்தது. மேலும், ஓபிஎஸ் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராகவும், ஈபிஎஸ் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகும் வரக் கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால், கழகத்தின் இன்றைய நிலையில் தலைமைப் பொறுப்பிற்கு வர வேண்டுமானால் 10 மாவட்டச் செயலாளர்கள் முன் மொழிய வேண்டும் என்றும், அவர் 5 ஆண்டுக்காலம் தலைமைக் கழகத்தின் நிர்வாகியாகவும் இருக்க வேண்டும் என்றும் சொன்னால் கோடீஸ்வரர் தான் அந்த பதவிக்கு வர முடியும் என்ற நிலை உருவாகும்” எனக் கூறினார்.