பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மாட்டிறைச்சி அமோகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி ஆதாரத்துடன் நிரூபித்துள்ளது.
கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வருகிற மே 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் முடிவுகள் மே 15ஆம் தேதி தெரிந்துவிடும். இந்நிலையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டிறைச்சி விற்பதை முழுமையாக தடை செய்வோம். மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்களை கைது செய்வோம்’ என வாக்குறுதி அளித்தனர்.
அவர்களின் இந்தக் கருத்து முற்றிலும் பொய்யானது எனக்கூறிய காங்கிரஸ் கட்சியின் ராமலிங்க ரெட்டி, பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் 3ஆம் இடத்தில் இருந்த இந்தியா 2ஆம் இடம் பிடித்ததாக ஆதாரங்களுடன் தெரிவித்தார். மேலும், பா.ஜ.க.வுக்கு பசுக்கள் மீதெல்லாம் பக்தி கிடையாது. அவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மீது மட்டுமே அவர்களின் குறிக்கோள் உள்ளது. 2015-16ஆம் ஆண்டில் மட்டும் மாட்டிறைச்சி விற்பனை மூலம் ரூ.26,682 கோடி வருமானம் இந்தியா ஈட்டியுள்ளது. அதேபோல், பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் மாட்டிறைச்சி அமோகமாக விற்பனை ஆகிறது என சுட்டிக்காட்டினார்.