Skip to main content

“திமுக இதை மட்டும் செய்தால் 5 இலட்சம் குடும்பங்களின் வாழ்வு மேலோங்கும்” - ஓபிஎஸ்

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

OPS urges government to create job opportunities in government transport corporations

 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தருமாறும் அதை செய்தால் 5 லட்சம் குடும்பங்களின் வாழ்வு மேம்படும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண் 180-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பினை மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொடுத்துள்ளார் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்தும் அரசுத் துறைகளிலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ வேலைவாய்ப்பினை வழங்க இயலாத நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வேலைவாய்ப்பினை வழங்கினார் என்று சொல்வது “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவானாம்” என்ற பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது.

 

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர், நடத்துநர், கம்மியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, பேருந்துகள் இருந்தும் அவற்றை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத நிலை நிலவுகிறது. தமிழ்நாட்டில் கனரக வாகன உரிமம் பெற்று, சாலைப் போக்குவரத்து நிறுவனத்தில் முறையாக பயிற்சி பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநராகவும், நடத்துநராகவும், கம்மியராகவும் பணியாற்றக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்து இருக்கிறார்கள். இவர்களை வைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக, வெளிப்படைத் தன்மையுடன் பணியமர்த்த தி.மு.க. அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 

இந்த நிலையில், காலியாக உள்ள பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்ப அண்மையில் முடிவு செய்யப்பட்டு, அதன்படி அவர்கள் பணியிலும் அமர்த்தப்பட்டார்கள். தி.மு.க. அரசின் இந்தச் செயலுக்கு நான் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, தற்போது ஓய்வு பெற்ற ஓட்டுநர், நடத்துநர்களை குறைந்த அளவு தொகுப்பூதியத்தில் பணியமர்த்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. தி.மு.க. அரசின் இந்த இளைஞர் விரோத, தொழிலாளர் விரோதப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மத்திய அரசை குறை கூறுவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் காலியாக உள்ள இலட்சக்கணக்கான அரசுப் பணியிடங்களை, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஆயிரக்கணக்கான பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்பி வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனை தி.மு.க. அரசு செய்தாலே ஐந்து இலட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரம் மேலோங்கும். வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மேடைக்கு மேடை பேசும் முதலமைச்சர், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு, நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரந்தரமாக நிரப்பிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்