சென்னையில் வீட்டை ஆய்வகமாக மாற்றி மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியே வாங்கிய போதைப்பொருள் தரமில்லாததால், சென்னை சௌகார்பேட்டையில் வேதிப்பொருட்கள் வாங்கி, வேதியியல் துறையில் படித்து வரும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் தயாரித்து விற்பனை செய்ததாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை கொடுங்கையூரில் வீட்டில் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் தயாரித்ததாகக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. போதைப்பொருள் கடத்தல் மையமாக மட்டுமன்றி, உற்பத்தியும் செய்யும் அளவிற்குப் போதைப்பொருள் கலாச்சாரத்தை வளர்த்துவிட்டுள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
போதைப்பொருள் புழக்கம் கட்டுக்குள் இருப்பதாக நினைக்கும் மாய உலகத்தில் இருந்து வெளிவந்து, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன். மேலும், இளைஞர்கள் இதுபோன்ற போதைப்பொருள் தயாரிப்பு போன்ற தீய செயல்களில் ஈடுபடாமல், ஆக்கப்பூர்வமான ஆராய்ச்சிகளில் தங்கள் அறிவை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.