Skip to main content

இடைக்கால நிவாரணம் கேட்ட ஓபிஎஸ் தரப்பு; வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்

Published on 03/04/2023 | Edited on 03/04/2023

 

 OPS side sought interim relief; The court adjourned the case

 

‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சார்பில் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.

 

வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்குமாறு பொறுப்பு நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழுத் தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் வழக்கு ஆகியவற்றை அவசர வழக்காக ஏற்று விசாரணையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரேஷ் பாபு கடந்த மாதம் மார்ச் 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

 

கடந்த 31 ஆம் தேதி தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரது மனுக்கள் ஒன்றாக நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணையைத் தொடங்கும்போதே இறுதி விசாரணை நடத்துவதற்கு ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒப்புக் கொள்கிறீர்களா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்து இருதரப்பும் வாதங்களையும் வைத்தனர்.

 

இறுதி விசாரணை என நீதிபதிகளும், இடைக்கால நிவாரணம் என ஓபிஎஸ் தரப்பும் வியூகம் கொடுத்திருந்த நிலையில், வழக்கு விசாரணையை நீதிபதிகள் இன்று தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. புதிய உறுப்பினர் சேர்க்கையின் பொழுது எங்கள் தரப்பு ஆதரவாளர்கள் நீக்கப்படலாம் எனவே இடைக்கால நிவாரணம் மற்றும் இடைக்கால உத்தரவு வழங்க ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். ஆனால் இந்த வழக்கில் ஏதேனும் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்