சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் தனித்தனியாக, ‘அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ரத்து, மீண்டும் பொதுச்செயலாளர் கொண்டு வருவது, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்தது உள்ளிட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியும், தங்களைக் கட்சியிலிருந்து நீக்கியதை ரத்து செய்யச் சொல்லியும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விரிவான விசாரணையை வரும் ஏப்ரல் 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி குமரேஷ் பாபு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு, இன்று இ.பி.எஸ். மனு தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், நாளை வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், இன்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு நாளை காலை 10 மணிக்கு இதனை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.