“ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாகக் கூறி, தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப்போகிறாரா?” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற எம்.பி.கனிமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதற்கு இபிஎஸ் விமர்சனம் செய்துள்ளதாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த திமுக எம்.பி. கனிமொழி, “இபிஎஸ் செய்யும் விமர்சனங்கள் என்பது எந்த வித ஆதாரமும் அடிப்படையும் இன்றி வரக்கூடிய விமர்சனங்கள். முதலமைச்சர் ஒவ்வொரு முறையும் வெளிநாடு சென்று திரும்பி வரும்போது கோடிக்கணக்கான அளவில் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டு தான் உள்ளன. இது தெரிந்த பின்பும் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சரே தென் மாவட்டங்களில் சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதன் அடிப்படையில் 900 கோடிக்கும் மேல் சிறு குறு தொழில்களுக்கு பட்ஜெட் ஒதுக்கியுள்ளார்கள். புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா அழைப்பிதழ் கொடுக்கவில்லை என்பதால் புறக்கணிக்கவில்லை. அது முறையாக நடத்தப்படவில்லை. அதனால் நாங்கள் செல்லவில்லை” என்றார்.