கர்நாடகத் தேர்தலில் பாஜக - காங்கிரஸ் இடையே பலமான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலாபுராகி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி விஷமுள்ள பாம்பு போன்றவர். பாம்பு விஷமுடையதா இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். அதை நக்கினால் நீங்கள் இறப்பீர்கள்” எனக் கூறியிருந்தார்.
காங்கிரஸ் தலைவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, “மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர். அவர் உலகிற்கு என்ன சொல்ல விரும்புகிறார்? பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டின் பிரதமர்; அவரை உலகம் முழுவதும் மதிக்கிறார்கள்; பிரதமருக்கு எதிராக இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது காங்கிரஸ் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. அவர் (கார்கே) இதற்கு இந்த நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனக் காட்டமாகப் பதில் அளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே தனது வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் பிரதமர் மோடியை குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் குறிப்பிட்டது பாஜகவின் கொள்கைகளைத்தான். பாஜகவின் கொள்கைகளைத்தான் நான் பாம்பு என்றேன். நான் தனிப்பட்ட முறையில் மோடியை கூறவில்லை. பாஜகவின் கொள்கைகள் பாம்பு போன்றது. நீங்கள் அதைத் தொட முயன்றால் உங்களுக்கு மரணம் நிச்சயம்” என விளக்கம் கொடுத்துள்ளார்.