நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக போட்டியிட்டார்.அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். மேலும் அமமுக சார்பாக இன்று திமுகவில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிட்டார்.மும்முனை போட்டி நிலவிய தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தேனி தொகுதி சார்ந்த மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தேனி மக்களவைத் தொகுதியில் தேர்தல் நடைபெற்றபோது வாக்குகளை பெற மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதனை அதிமுகவினர் திட்டமிட்டு செய்து உள்ளனர். தேனி தொகுதியில் பணம் பட்டுவாடா செய்ததற்குகான ஆதாரங்கள் உள்ளது.எனவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்படப்பட்டுள்ளது. இதேபோன்ற புகார் வேலூர் தொகுதிக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.
நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால் ஓபிஎஸ் தரப்பு சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாக சொல்கின்றனர். மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் எடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் தனக்கு இருக்கும் டெல்லி செல்வாக்கையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி இந்த வழக்கை தனக்கு சாதகமாக மாற்றி விடுவார் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் எடப்பாடி தரப்பு அமைதி காத்து வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.