அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத் தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இன்று காலை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, நேற்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததும், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்., ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தனது அணியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கை எப்படி எதிர் கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்காக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ். ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோ ஆஜராகியுள்ளனர். இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், அதிமுக சார்பில் விஜயநாராயண் ஆகியோர் ஆஜராகியுள்ளனர்.
அதிமுக கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண் வாதிடும்போது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியின் பங்கு முக்கியம். மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்கட்சி விவகாரத்தில் தலையிடக் கூடாது. ஓ.பி.எஸ். தரப்பினர் பொதுக்குழுவை எதிர்த்து நான்கு முறை உயர் நீதிமன்ற தனிநீதிபதியிடமும், மூன்று முறை அமர்வு நீதிமன்றத்திலும் முறையிட்டு தோல்வியடைந்துள்ளனர்.
ஜெயலலிதாவை நிரந்தர பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு மீண்டும் அப்பதவியை கொண்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால், ஏன் கொண்டுவரக்கூடாது என்ற காரணத்தை ஓ.பி.எஸ். தரப்பினர் கூறவில்லை. சூழ்நிலைகள் மாறியதால் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுச் செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் விதி மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. தீர்மானம் சட்டவிரோதமானது அல்ல; கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. இரடை தலைமையில் இருந்து ஒற்றை தலைமைக்கு மாறும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒற்றை தலைமை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எந்த பங்கும் இல்லை. பொதுக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு பழனிசாமிக்கே உள்ளது என்று வாதிட்டார்.