சமீபத்தில் சேலம் கால்நடைப் பூங்கா திறப்பு விழாவுக்கு சென்ற எடப்பாடி, வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் நான் தான் முதல்வர் வேட்பாளர் என்பதை நம்ம கட்சியினரிடம் எடுத்துக் கூற, அமைச்சர்களுக்கு ஸ்பெஷல் விருந்து வைத்தார். இது ஓ.பி.எஸ்.சை மிகவும் அப்செட் செய்ததாக சொல்லப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். எதிர்பார்க்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனால் எடப்பாடி தரப்புக்கும் ஒரு ஆதங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் எடப்பாடி முதல்வர் பொறுப்பை ஏற்று 4-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதைப் பெரிய அளவில் அதிமுகவினர் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்ப்பும் இருந்தது. அவர் ஆதரவாளர்கள் ஸ்வீட் கொடுத்து அதைக் கொண்டாடியுள்ளனர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. வாசன் உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களும் எடப்பாடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். ஆனால் பிரதமர் மோடி உட்பட டெல்லி பா.ஜ.க. தரப்பில் இருந்தும், மாநில பா.ஜ.க. தரப்பில் இருந்தும் அவரைத் தொடர்புகொண்டு ஒருவர் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதில் எடப்பாடி அப்செட் ஆனதாக சொல்லப்படுகிறது. பா.ஜ.க. தரப்பிடம் இது குறித்து நாம் விசாரித்தபோது, தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தமிழகத்தில் இன்னும் போராட்டங்கள் நடந்துவருவதை எங்கள் கட்சித் தலைமை விரும்பவில்லை. அதனால்தான் அவரை நாங்கள் யாரும் வாழ்த்தவில்லை என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிவருகின்றனர்.