தன்னைக் கேட்காமல் அதிமுக வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித வரவு செலவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என வங்கி மேலாளருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நேற்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் வசமிருந்த பொருளாளர் பதவியானது திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமையக கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்.
இந்த நிகழ்வின்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மாறிமாறி தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்
இந்த நிலையில், தேர்தல் ஆணைய விதிகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளில் தானே தொடர்வதாகவும் தன்னைக் கேட்காமல் அதிமுக வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித வரவுசெலவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கரூர் வைஸ்யா வங்கியின் மைலாப்பூர் கிளை மேலாளருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னதாக, அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டது குறித்து வங்கிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.