பா.ஜ.க. அரசால் ஆந்திர மாநிலத்தின் மக்கள் கொந்தளித்து வருவதாகவும், நான் பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்டேன் என்றும் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தொழில் கூட்டமைப்பான சிஐஐ சார்பில் நடைபெற்ற மாநாட்டின் நிறைவு விழாவில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, ‘ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின் சிறப்பு சலுகைகள் மற்றும் நிதி உதவி அளிப்பதாக மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு உறுதி அளித்தது. ஆனால், அதன் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆந்திராவைக் கண்டுகொள்ளாமல் வஞ்சிக்கிறது. இதனால், ஆந்திர மக்கள் பாஜகவின் மீது மனம் வெறுத்து, கொந்தளித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டதில் இருந்து பல பிரச்சனைகளை அரசு சந்தித்திருக்கிறது. ஆனால், இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஆந்திராவின் புதிய தலைநகரை பல தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கியிருக்கிறோம். இதற்காக ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.
மக்களும் என்னிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின் செய்து தருவதாகக் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் எனக்கூறியும் வஞ்சிக்கிறார்கள். நான் பொறுமை இழந்து வருகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ஆந்திராவை வஞ்சித்திருப்பதாக அம்மாநில முதல்வர் உள்ளிட்ட பலரும் மத்திய அரசிடம் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சு கவனிக்கத்தக்கது.