Skip to main content

முதல்வர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஓ.பி.எஸ்.! - ப.சிதம்பரம் கிண்டல்

Published on 16/05/2018 | Edited on 16/05/2018

முதல்வர் பதவிக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விண்ணப்பம் போடுகிறாரா என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

PChidambaram

 

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. இதையடுத்து, முழுமையான வெற்றி பெற்றதாக பா.ஜ.க.வினர் கொண்டாடத் தொடங்கினர். இதற்கு இந்தியா முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் பலர் பா.ஜ.க.வினருக்கு வாழ்த்து தெரிவித்தநிலையில், தமிழக துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

அவர்களில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவிற்கு எழுதிய கடிதத்தில், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி பா.ஜ.க.விற்கு தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு என எழுதியிருந்தார். 

 

 

இதுகுறித்து, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘கர்நாடகாவில் பாஜகவின் தேர்தல் சாதனையை "தென்னிந்தியாவில் பிரம்மாண்டமான நுழைவு" என்று ஓபிஎஸ் வரவேற்றிருப்பது ஏன்? இந்தி திணிப்பை வரவேற்கிறாரா? அல்லது காவிரி ஆணைய மறுப்பை வரவேற்கிறாரா? இல்லை, இபிஎஸ் அவர்களை நீக்கிவிட்டு தன்னை முதலமைச்சராக நியமிக்க விண்ணப்பம் போடுகிறாரா?’ என தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

'அபாண்டமாக பொய் பேசுகிறார் மோடி;-ப.சிதம்பரம் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
 'Modi speaks a lot of lies;- P. Chidambaram condemns

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மோடி பேசிய ஒவ்வொரு வாக்கியமும் பொய்க்கு மேல் பொய் நிரம்பியதாக இருந்தது. மக்களின் நகை, சொத்துக்களைப் பறித்து இஸ்லாமியர்களிடம் தந்து விடுவோம் என்று காங்கிரஸ் எப்போது பேசியது என்று பாஜகவினால் கூற முடியுமா? தனிநபரின் சொத்துக்களையும் பெண்களிடம் இருக்கும் தங்கத்தையும் மதிப்பீடு செய்வோம் என எப்போது காங்கிரஸ் அறிவித்தது என பாஜக கூற முடியுமா? பழங்குடி மக்களிடம் உள்ள தங்கம், வெள்ளி எவ்வளவு என்பதை கணக்கெடுப்போம் எனக் காங்கிரஸ் எப்போது கூறியது? அரசு ஊழியர்களின் நிலமும் பணமும் கைப்பற்றப்பட்டு பிரித்தளிக்கப்படும் எனக் காங்கிரஸ் எப்போது பேசியது? நரேந்திர மோடிக்கு ஏற்கெனவே பதவி வகித்த பிரதமர்களை கொஞ்சமாவது மதிக்க தெரிந்து கொள்ள வேண்டும். ராஜஸ்தானில் நடந்த பாஜக பொதுக் கூட்டங்களில் மோடி அபாண்டமாக பொய் பேசி உள்ளார். இதுவரை இருந்த பிரதமர்களில் ஒருவர் கூட மோடியை போல் அடாவடியாக பேசியது இல்லை''எனக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.