
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து அதிமுக, பாமக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்ப, இப்போதே அதுகுறித்த ஆலோசனைகளை செய்துவருகின்றன.
குறிப்பாக, சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவது, கூட்டுறவு வங்கிகளில் உள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை, 7 பேர் விடுதலை குறித்த திமுகவின் நிலைப்பாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பதில் கிடைக்கும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்க்கின்றன.
அதிமுக, பாமக, பாஜக கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் இதுகுறித்து கேள்வி எழுப்புவார்கள் என்று அக்கட்சிகளின் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேசமயம், திமுக கூட்டணிக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ், இந்தமுறை 18 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்றத்தில் நுழைகிறது. 7 பேர் விடுதலையில் சாதகமான முடிவெடுக்கும் நிலையில் உள்ள திமுக, இதுகுறித்து ஜனாதிபதிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியிருக்கிறது.
அதன்படி, சட்டமன்றத்தில் 7 பேர் விடுதலைக்கு ஆதரவான நிலைப்பாட்டை முதல்வர் ஸ்டாலின் எடுக்கும்பட்சத்தில், அதனை எதிர்த்து கடுமையாக விவாதிக்க தமிழக காங்கிரஸ் காத்திருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். ஆக, எதிர்க்கட்சிகளால் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரே பரபரப்பாக இருக்கும் என சூழல்கள் விவரிக்கின்றன.