நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திட்டக்குடியில் உள்ள கீழ்கால்வாயில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரகாஷ் அறிமுக கூட்டம் இன்று (29.03.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமை வகித்தார். அப்போது வி.சி.க. நிர்வாகிகள் நாற்காலிகளை வீசி ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் வி.சி.க. கடலூர் முன்னாள் மாவட்ட செயலாளர் பிலிப் குமாரின் ஆதரவாளர்களும், தற்போதைய மாவட்ட செயலாளர் திராவிட மணியின் ஆதரவாளர்களும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதல் சம்பவத்தால் கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.