சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் பொழிந்த அதீத கன மழையால் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகியது. தற்பொழுது படிப்படியாக மீண்டு வருகிறது.
மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரண நிதி கோரியிருந்தது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்த சில கருத்துக்கள் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடச் சென்ற புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''இங்குள்ள திராவிட மாடல் திண்டாடும் மாடலாக மாறி உள்ளது. நான் நேரடியாக முதல்வரை பார்த்து கேட்கிறேன். 18ஆம் தேதி இங்கே மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கும் பொழுது வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் சந்திக்க வேண்டுமா? அல்லது 'மக்களோடு முதல்வர்' என்று கோயம்புத்தூரில் நிகழ்ச்சி நடத்த வேண்டுமா?
அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. கூட்டணிக் கட்சிக்காக சென்றுவிட்டார். பிரதமரை பார்ப்பதற்காக தான் டெல்லி போனேன் என்கிறார்கள். அப்போது கூட்டணி கட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்ளாமல் போனீர்களா? மாநில அரசு நிச்சயமாக இதனைக் கையாள்வதில் தோல்வி அடைந்திருக்கிறது.
முதலமைச்சர் இன்னொன்று சொல்கிறார்.'சென்னை மக்களை எப்படி மீட்டு எடுத்தோமோ அதேபோல தென்பகுதி மக்களை மீட்டெடுப்போம்' என்கிறார். சென்னையை நீங்கள் மீட்டெடுக்கவில்லை. சென்னை மக்கள் தாங்களாகவே மீண்டு எழுந்தார்கள்'' என்றார்.