
டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதிமீறல்களுக்கும் எல்லாவித பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திதரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது
— சீமான் (@SeemanOfficial) May 13, 2020
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வாணியம்பாடி பகுதிகளில் வியாபாரிகள் தள்ளுவண்டிகளில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்த நிலையில் அந்தத் தள்ளுவண்டியில் உள்ள பழங்களைத் தூக்கி எறிந்தும், தள்ளுவண்டிகளைக் கவிழ்த்தும் அந்த வியாபாரியிடம், ஆணையர் நடந்து கொண்ட விதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வாணியம்பாடி சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதிமீறல்களுக்கும் எல்லாவித பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக் கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்குச் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு குறித்த வாணியம்பாடி ஆணையரின் வருத்தம் வெளிப்படுத்துகிறது என்றும், எனவே, கரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி கடைகள் இயங்குவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.