Skip to main content

மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மத்திய அரசு... பாஜகவை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் சீமான்! 

Published on 31/03/2020 | Edited on 31/03/2020


கரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தங்களால் முடிந்த நிதியைத் தருமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் நாட்டில் பல தொழில்துறைகள் முடங்கி இருக்கின்றன, பல அமைப்புசாரா தொழிலாளர்கள் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியைத் தருமாறு நாட்டு மக்களுக்குப் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரிடர்களின் போது மக்களுக்காக இதுபோன்ற நிதி உதவி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 


 

 

ntk



இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவறானப் பொருளாதார முடிவுகளாலும், பிழையானப் பொருளாதாரக் கொள்கைகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்து மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு தற்போது மக்களிடம் நிதிகேட்டு அவர்கள் தலை மீதே மொத்த சுமையையும் ஏற்ற முனைவதா? என்றும், ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்திருப்போருக்கு அடுத்த மூன்று மாதத்திற்கு ரூ 5,00 வீதம் வைத்து கொண்டு ஏழை நடுத்தர மக்களால் குறைந்தது ஒரு வேளை உணவு வாங்க முடியுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், மாநிலங்களின் அதிகாரத்தைக் குறைத்து தன்னுரிமையைப் பறித்து தன்னாட்சியை முற்றிலுமாகக் குலைத்து அதிகாரக்குவிப்பில் ஈடுபட்டு எதேச்சதிகாரப்போக்கோடு செயல்பட்டு வரும் மத்திய அரசு, கொரோனோ நோய்த் தொற்றைத் தடுக்கும் விவகாரத்தில் மாநிலங்களின் கைகளில் பொறுப்பைத் தள்ளிவிட்டு தனது கடமையைக் கைகழுவி வருவதும், மாநிலங்களுக்குரிய நிதியினைத் தர மறுப்பதும், தொடக்கம் முதலே மெத்தனப்போக்கோடு செயல்பட்டு வருவதும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. ஆகவே, தனிப்பெரும் முதலாளிகளின் வாராக் கடன்களை வசூலித்தும், அவர்களுக்குரிய வரி உள்ளிட்ட அத்தனை சலுகைகளையும் பறித்தும் வருவாயை உருவாக்கி இப்பேரிடர் காலத்தை எதிர்கொள்ள வேண்டும் என மத்திய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.   

 

சார்ந்த செய்திகள்