புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி மீது புதுச்சேரி பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேலு துணை நிலை ஆளுநர் கிரண்பேடியிடம் நில அபகரிப்பு புகார் அளித்தார். இதனை கிரண்பேடி சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து எம்எல்ஏ தனவேலு காங்கிரசிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரம் குறித்து தனவேலு 7 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தனவேலு கொடுத்த புகாரை சமூக வலைதளத்தில் ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ளார் என்று குற்றம்சாட்டிய முதல்வர் நாராயணசாமி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நிரூபித்தால் பதவி விலக தயார், அதே போல் ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண்பேடி விலக தயாரா? என்று சவால் விடுத்துள்ளார்.