கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதோடு, கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றன. இதனையடுத்து தற்போது தற்சார்புடன் இருக்க கரோனா கற்பித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், "காந்தி போதித்தபோது வராதது, ஜே.சி.குமரப்பா முதல் காமராஜர், இந்திராகாந்தி வரை சொன்னபோது புரியாதது, நாங்கள் 10 வருடமாகத் தெரு தெருவாகப் பேசியபோது கேட்காதது, தற்போது தற்சார்புடன் இருக்க கரோனா கற்பித்துள்ளது என்கிறார் பிரதமர். மேலும் ஒவ்வொன்றையும் கரோனா தான் சொல்லணும் போல!" என்றும் குறிப்பிட்டுள்ளார்.