விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு குறித்து விமர்சித்துப் பேசினார். அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் அதற்கு கீழே ஒரு கட்டமைப்பு இருந்ததை குறிப்பிட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சியில் அது இந்து கோயில், மசூதி, தேவாலயம் என்று அறிய முடியாது. ஆனால், அந்த கட்டமைப்பை வைத்து அறியலாம். குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த கருத்துக்கு நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சை கருத்து ஒன்றை பதிவு செய்து இருந்தார். இந்தநிலையில், இந்து கோவில்கள் பற்றி விடுதலை சிறுத்தை கட்சிகளின் தலைவர் திருமாவளவனின் பேச்சு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் கடம்பூர் ராஜு, பொதுவாக கோவிலுக்கு செல்லும் அனைவரும் அங்குள்ள சிற்பங்களை கலை நயத்தோடுதான் பார்ப்பார்கள், ஆனால் கோவிலுக்கு சென்ற திருமாவளவனின் பார்வை ஆபாசமாக இருந்ததால், கோவிலில் கலை நயத்தோடு இருந்த சிற்பங்கள் அனைத்தும் அவரது கண்களுக்கு ஆபாசமாக தெரிந்துள்ளது, அதற்கு நாம் ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் ஆவேசமாக பேசியுள்ளார்.