பாமகவுடன் தொகுதி உடன்பாட்டை முடித்த அதிமுக, பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், விஜயகாந்தின் தேமுதிகவுடனும் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்திருந்த நிலையில், மீண்டும் அமைச்சர் தங்கமணி இல்லத்தில், தேமுதிக நிர்வாகிகள் அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, இளங்கோவன் உள்ளிட்டோர் அமைச்சர் தங்கமணியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையில், தேமுதிக அதிமுகவிற்கு இரண்டு ஆப்ஷன்களைக் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ஆப்ஷன் 1: பா.ம.க.விற்கு ஒதுக்கப்பட்டது போல் 23 தொகுதிகள் வேண்டும்.
ஆப்ஷன் 2: இருபது தொகுதிகளுடன் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதிமுக சார்பில் 12 தொகுதிகளை மட்டுமே தேமுதிகவுக்கு ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாக, தற்போது வரை பேச்சுவார்த்தை நீடித்துவருகிறது.
2005ல் தேமுதிகவை தொடங்கினார் விஜயகாந்த். 2006 சட்டமன்றத் தேர்தலில் முதன் முதலாக அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டுத் தேர்தலைச் சந்தித்தது தேமுதிக. அந்தத் தேர்தலில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வெற்றிபெற்றார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றிபெற்றது தேமுதிக. அதில் பல தேமுதிக எம்எல்ஏக்கள் கட்சி மாறி சென்றுவிட்டனர். 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 104 தொகுதிகளில் போட்டியிட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் தேமுதிக தோல்வியைச் சந்தித்தது.
இந்தநிலையில் அக்கட்சியினர் கூறுகையில், போட்டி போட்டு அதிக தொகுதிகளை வாங்குவது முக்கியமில்லை. வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிந்து, குறைந்த தொகுதிகளை வாங்கினாலும் வெற்றிபெற உழைக்கலாம். அதனைவிட்டு பிற கட்சிகளைக் காட்டி, எங்களுக்கும் இவ்வளவு வேண்டும் என்றால் அது வெற்றி வாய்ப்புக்குக் கடினமாக இருக்கும் என்கின்றனர். மேலும், விஜயகாந்த் முன்பு இருந்ததைப்போல இருந்தால் வலிமையான பிரச்சாரம் செய்வார். தேர்தல் செலவைக் கணக்கு வழக்கு இல்லாமல் செலவு செய்யக் கூடியவர்களெல்லாம் கட்சியில் இருந்து சென்றுவிட்டனர். இவையெல்லாவற்றையும் கணக்கில் வைத்துக்கொள்ள வேண்டும். கட்சி மேலும் பலம் பெறத்தான் இதனைச் சொல்கிறோம். கரைய வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் சொல்கிறோம். தலைமை எங்கள் கருத்தைப் பரிசீலிக்கும் என்று நம்புகிறோம். எங்கள் கருத்துகளைக் கேட்காமல் தேமுதிக தனித்து நிற்கவும் தயார் என்று பேசிவருவது நடைமுறைக்கு ஒத்துவராது என்றனர்.