அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான கருத்து வேறுபாடுகளுக்குப் பின்னர் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்தி உள்ளார். அதேநேரம் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்பொழுது இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘அதிமுகவின் சட்டதிட்ட விதியின் அடிப்படையில் உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். வேட்புமனு மார்ச் 18 ஆம் தேதி தொடங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனு பரிசீலனை 20 ஆம் தேதி. வேட்பு மனுவை திரும்பப் பெற 21ம் தேதி கடைசி நாள். மார்ச் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு, மறுநாள் 27 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் 25 ஆயிரம் ரூபாய் செலுத்தி விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம்' என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றும் நாளையும் அவகாசம் உள்ள நிலையில், இன்று காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த இ.பி.எஸ். 11.05 மணி அளவில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக அதிமுக அலுவலகத்தில் உள்ள அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்களும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களுமான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார் இ.பி.எஸ்.
அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும் அல்லது போட்டியிடும் நபர், பத்து ஆண்டுகள் கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும், ஐந்து வருடங்கள் தலைமைக் கழகப் பொறுப்புகளில் பணியாற்றி இருக்க வேண்டும், போட்டியிட விரும்புவர் பெயரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழியவும், 10 மாவட்டச் செயலாளர்கள் வழிமொழியவும் வேண்டும் என்பன உள்ளிட்ட கட்சியின் சட்ட விதிகளில் திருத்தங்களை கடந்த பொதுக்குழுவில் கொண்டு வந்தனர். அதேபோல், கட்சி விதி 20அ பிரிவு-2ன் படி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதும் மாற்றி அமைக்கப்பட்டது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என குரல்கள் எழுந்துவந்த நிலையில், இ.பி.எஸ். சார்பில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் இ.பி.எஸ். ஒருமனதாக அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.