உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், மாநில தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை அனைவரும் தமிழ்நாட்டைச் சுற்றி சுழன்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர், கார்தியாயினிக்கு ஆதரவாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “சிதம்பரத்தில் பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நான் பெருமையாக கருதுகிறேன். தமிழ்நாட்டுக்கு பல திட்டங்களை கொண்டு வந்தவர் மோடி. பிரதான் மந்திரி கரி கல்யாணம் அன்னை யோஜனா திட்டத்தில் 80 கோடி மக்களுக்கு 2020ல் இருந்து இன்று வரைக்கும், இலவசமாக தனிநபர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் அரிசி வழங்கி வருகிறார். அதேபோல் கோதுமை, வழங்கும் திட்டம் செயல்படுகிறது.
விவசாயிகள் நலன் கருதி பீயன்கிசான் சமான் யோஜனா, திட்டத்தின் கீழ் உங்களுடைய அக்கவுண்டில் ரூ.6,000 வருஷத்துக்கு வருகிறது. விவசாயப் பொருள்களுக்கு டபுள் மடங்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 11 மெடிக்கல் காலேஜ் திறந்து வைத்தார் மோடி, அதில் ஒன்று அரியலூரில் உள்ளது. இதைத் தவிர நேஷனல் ஹைவே விரிவாக்குதல் செய்வதற்கும் நல்ல சாலையாக போடுவதற்கும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 60 கிலோ மீட்டர் ரோடுக்கு மீன்சுருட்டி நேஷனல் ஹைவேக்கு ரூ.1025 கோடி ரூபாய் ரோடு போடுவதற்கு கொடுக்கப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் ரயில்வே நிலையம் புதுமையாக்கப்படுவதற்கு வேண்டுமென்ற திட்டம் போட்டு உள்ளார்கள். அரியலூர், சிதம்பரம் ஸ்டேஷன் இவற்றை எல்லாவற்றிற்கும் அமர்த்பாரத் ஸ்டேஷன் ஸ்கீம் மூலமாக புதுப்பிக்கப்படும். மீனவர்கள் அதிகமாக உள்ள ஏரியா இது, விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு இதை வைத்து பேங்கில் விவசாயிகள் கடன் வாங்க முடியும், அதற்கு அரசு மூலம் மானியம் கொடுக்கப்படுகிறது. இதனால் குறைந்த வட்டியில் அவர்களுக்கு கடன் கிடைக்கிறது.
சிதம்பரம் பகுதியில் கிசான் கிரெடிட் கார்டு அனைத்து மீனவர்களுக்கும் கிடைப்பதற்கு கணக்கு எடுக்கப்படும். முந்திரி தொழில் ஈடுபடும் பெண்களுக்கு சுய உதவிக் குழு மூலமாக. அவர்களை கூட்டமைத்து அவற்றை சுத்திகரிப்பு செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடியும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் அங்குள்ள மருத்துவமனையும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
திமுக, காங்கிரஸ் கட்சி மற்றும் தோழமைக் கட்சியில் ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளில் ஊழல் காரணமாக இந்திய நாடு நிலை குலைந்து போனது, நாட்டின் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ரேங்க் பட்டியலில் சென்று விட்டது. இது மோடி ஆட்சியில் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2020ல் கொரோனா தொற்று நோய் வந்ததும் உலகமே நடுங்கியது. அந்தச் சமயத்திலும் நாட்டை முன்னேற்றத்துக்கு கொண்டு வந்தவர் மோடி
மோடி வந்தால், கோ பேக் மோடி என்று தமிழ்நாட்டில் குரல் கொடுத்து வருகிறார்கள். அண்ணாமலை ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு வந்தவரை ஜோக்கர் என்று ஏளனமாக பேசுகிறார்கள், ஆனால் அவர் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்” என்று பேசினார்.