கழுதை பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை காலம் காலமாக கிராமப்புற மக்களிடம் இருந்து வருகிறது. இதனடிப்படையில் கிராமங்களில் கைக்குழந்தை வைத்துள்ள தாய்மார்கள் ஏராளமானவர்கள் குழந்தைகளுக்கு கழுதைப்பால் வாங்கி கொடுக்கின்றனர். பச்சிளம் குழந்தைகளுக்கு கழுதைப் பால் கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், பேசும் திறன் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இன்றளவும் கிராமப்புறங்களில் நிலவி வருகிறது.
இதற்காகவே கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, சிதம்பரம், கடலூர், வேப்பூர், நெய்வேலி, காட்டுமன்னார்குடி ஆகிய பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட கழுதைகளுடன் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆங்காங்கே கிராமங்களில் முகாமிட்டு தங்கிக்கொண்டு காலை நேரத்தில் தெருத்தெருவாக சென்று கழுதைப்பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர்.
ஒரு பாலாடை கழுதைப்பால் நகரப்பகுதியில் 100 ரூபாய்க்கும், கிராமத்தில் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறார்கள். ஏராளமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கழுதைப் பால் வாங்கி கொடுக்கின்றனர்.
மருத்துவ ஆய்வில் கழுதைப் பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு பேச்சு திறன், உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது பற்றி எந்த ஆய்வும் இதுவரை வெளிவரவில்லை. இருந்தும் கிராமப்புறங்களில் கழுதை பாலுக்கு காலம், காலமாக அமோக வரவேற்பு இருக்கவே செய்கிறது