விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் விசிக நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தொடர் வெற்றியைப் பெற்று வருகிற திமுக கூட்டணி வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்று விடக்கூடாது, அதனுடைய கட்டுக்கோப்பைச் சீர்குலைக்க வேண்டும் என்பது தான் சிலரின் நோக்கமாக உள்ளது. அதற்கு விசிகவை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம் என்று சிலர் சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு வாய்ப்பில்லை. கட்சியில் துணை பொதுச் செயலாளர் 10 பேர் உள்ளனர். அதில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.
துணைப் பொதுச்செயலாளர் அளவிலான பொறுப்புகளில் இடம்பெறக் கூடியவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறுகிற போது கட்சி நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுகிறபோது தலைவர் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்பதை நடைமுறையாகக் கொண்டுள்ளோம். விசிகவில் தலித் அல்லாதவர்கள் எந்த மட்டத்தில் பொறுப்பில் இருந்தாலும் நடவடிக்கை என்று வருகிற போது தலைவர், பொதுச்செயலாளர்கள் உயர்நிலைக் குழுவின் கவனத்திற்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு முகாந்திரமானவை என்பதை உறுதிப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நடைமுறையாகக் கொண்டுள்ளோம்.
ஏனென்றால் தலித் அடையாளத்தோடு அரசியல் களத்தில் விசிக அடி எடுத்து வைத்தது. இது முழுமையான அரசியல் கட்சியாக மாற வேண்டும் என்பதற்கு வேளச்சேரி தீர்மானம் என்பதை 2007இல் நிறைவேற்றினோம். அதன்படி தலித் அல்லாத ஜனநாயக சக்திகள் இந்த கட்சியில் அதிகார மையங்களுக்கு வர வேண்டும். பொறுப்புகளை ஏற்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்மானம். அப்படி வருகிற போது அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தலைவருடைய கடமை. அவர்கள் அந்த பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவதற்கான பாதுகாப்பை உறுபடுத்துவது ஆகும். ஆகவே தான் ஆதவ் அர்ஜுனாவின் அண்மைக்கால செயல்பாடுகள் கட்சி நலன்களுக்கு எதிராக இருப்பது என்பதை கட்சி தோழர்கள் உணர்ந்து தலைமையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள். நேற்று பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி இருக்கிறோம். அது தொடர்பான முடிவை விரைவில் அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.